இந்திய கடற்றொழிலாளர்களை எச்சரிக்கும் அமைச்சர் சந்திரசேகர்!
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01.07.2025) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலானது எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்
கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.
இந்திய கடற்றொழிலாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும்.
இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர். இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது."என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
