பாதாள உலக குழுவினருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட அமைச்சர் - ஆதாரத்தை வெளியிட்ட பொன்சேகா
பாதாள உலக குழுவினருடன் அமைச்சர் சரத் வீரசேகரவும் பிரபல பௌத்த பிக்கு ஒருவரும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அண்மையில் அவையில் என்னை பற்றி பேசி எனக்கு எதிராக பெரிய சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. என் மீது சேறுபூசிய அந்த நபரை சமூக வலைத்தளங்களில் பீச்சங் வீரசேகர என்றே கூறுகின்றனர்.
அவருக்கு நான் சிறிய பதில் ஒன்றை வழங்க வேண்டும். கைது செய்யப்படும் நபர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக நான் பேசினேன். அப்போது சரத் வீரசேகர டிங்கரின் லசந்த என்பவர் பற்றி கூறினார்.
அப்படியான நபரின் பெயரை கூட நான் தெரிவித்திருக்கவில்லை. அந்த மனுஷனை பற்றி எனக்கு தெரியவும் தெரியாது. கைது செய்யப்படுபவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்தும் நடக்கின்றது, அது மிக கூடாத நடவடிக்கை, மிலேச்சத்தனமான செயல் என்று நான் சொன்னேன். சரத் வீரசேகரவுக்கு மூளையில் பிரச்சினையோ தெரியாது.
டிங்கரின் லசந்த என்பவருடன் என்னை தொடர்புப்படுத்தி இந்த இடத்தில் துள்ளி குதித்தார். எனக்கு அந்த நபரை தனிப்பட்ட ரீதியில் தெரியாது. சரத் வீரசேகர போன்று நான், பாதாள உலகக்குழுவினர், கடத்தல் காரர்களிடம் பணத்தை பெற்று கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவன் அல்ல.
இங்கு இரண்டு புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பாருங்கள். இந்த புகைப்படத்தில் சரத் வீரசேகர, லடியா என்ற கடத்தல்காரன், ஐஸ் போதைப் பொருளை நாட்டுக்கு கடத்தி வரும், அந்த நபரின் தம்பி இருக்கின்றார்.
லடியா நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். லடியாவின் தம்பியும் லடியாவின் நண்பர் ஒருவர் இந்த புகைப்படத்தில் இருக்கின்றனர். இவர்களுடன் புகைப்படத்தில் இருக்கும் சரத் வீரசேகர என்ற நபர், நான் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறுகிறார்.
இந்த இடத்தில் போதனை செய்யும் பௌத்த பிக்கு ஒருவரும் இருக்கின்றார், கௌரவ அமைச்சர் அவர்களே. இதுதான் அந்த புகைப்படம். இந்த பிக்கு சம்பந்தமாகவே தற்போது குரல் பதிவுகள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த பிக்கு போதனை வழங்குகிறார்.
வெளியாகியுள்ள குரல் பதிவுகளில் உள்ளது போன்ற போதனைகளை வழங்குகிறாரோ தெரியவில்லை. அப்படியானால், அமைச்சர் சரத் வீரசேகர லடியா என்பவரின் தம்பியுடன் அந்த இடத்தில் ஏதோ ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால், நாங்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவதில்லை.
அவரையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கோருகிறேன். அவரது பதவிக்கு இது பொருத்தமற்றது. அத்துடன் சன்சைன் சுத்தாவை கொலை செய்ததன் காரணமாகவே டிங்கரின் லந்தவை கொன்றதாக சரத் வீரசேகர கூறியிருந்தார்.
அப்படியானால், சன்சைன் சுத்தா என்பவர் சரத் வீரசேகரவின் நண்பராக இருக்க வேண்டும். சரத் வீரசேகர பாதாள உலகத்தின் ஒரு தரப்பினருடன் நெருங்கி, மற்றுமொரு தரப்பினரை கொலை செய்கின்றார் என்றே புரிகிறது. இவற்றை மறைத்து செய்ய முடியாது.
வேடம் பூண்டாலும் வெட்ட வெளியிலேயே ஆட வேண்டும். அவரது காவல்துறையினர் முதுகெலும்பில்லாதவர் என்று கூற வேண்டாம் என வீரசேகர கூறுகிறார். நான் முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறவில்லை. வீரசேகரவுக்கு தவறியுள்ளது. அவரது காவல்துறை என்கிறார்.
காவல்துறை எப்படி அவருடையதாகும். மூடி வளர்த்த ஒருவர் காவல்துறை திணைக்களத்தில் இருக்கின்றார். அவர் வீரசேகரவின் நபர். ஏனைய காவல்துறையினர் அவருக்குரியவர்கள் அல்ல. காவல்துறையினர் அனைவரையும் நான் முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறவில்லை.
எனினும் வீரசேகரவை மகிழ்விக்க கொலை செய்பவர்களை முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூற நான் அச்சப்படவில்லை. முதுகெலும்பில்லாதவர்களே மிலேச்சத்தனமான வேலைகளை செய்வார்கள். இதற்கு தலைமை தாங்கும் வீரசேகர முதுகெலும்பில்லாதவர்களில் உச்சத்தில் இருப்பவர் என்று நான் கூற நேரிடும் என தெரிவித்துள்ளார்.