திறைசேரியிடம் பணமில்லை இருப்பதை வைத்து வேலை செய்வோம் - நிமல் சிறிபால டி சில்வா!
நாட்டிலுள்ள குறைபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இருக்கும் வளங்களை கூடியளவில் பயன்படுத்தி சேவையாற்றுவதற்கு சகல அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற பிரதேச அலுவலகங்களின் அதிகாரிகள் கலந்துக்கொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரதேச அலுவலகங்களில் உள்ள குறைபாடுகளை தீர்த்து வைக்கும் பலம் தற்போது எம்மிடம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை புரிந்துக்கொள்ள முடியாமல் மக்கள் உள்ளனர்.
இதனால், துரிதமாக நாம் இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாம் எம்மிடம் இருக்கும் வளத்தை போதுமான அளவில் பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும்.
பல்வேறு பரீட்சைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை தவிர புதிதாக எந்த வெற்றிடங்களையும் நிரப்பும் இயலுமை தற்போது எமக்கில்லை.
திறைசேரியில் அதற்கான பணம் இல்லை. இதனால், நாம் முடிந்தளவில் சிக்கனமாக செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
