கூட்டங்களில் கோமாளி கூத்தாடும் யாழ் எம்.பிக்கள்: சீரழியும் தமிழினம்
நடைபெற்று முடிந்த யாழ். (Jaffna) ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பாரிய வாக்குவாதங்களுக்கும் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை முன்னிறுத்தியதுமான ஒரு கேலிக்கூத்தாக நிறைவுற்றது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (25) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் வடக்கிற்காக அறிவிக்கப்பட 5ஆயிரம் மில்லியன் உத்தேச ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டம், குடி நீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கூட்டத்தில் இதனை தாண்டி தனிப்பட்ட விடயங்கள் குறித்த வாக்குவாதமே பேசுபொருளாகவும் பிரதான வாய்த்தர்க்கமாகவும் மாறி இருந்தது.
கூட்டத்தில் பெரிதும் வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா, சிறீதரன், ரஜீவன், இளங்குமரன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற எவ்வித வாக்குவாதமும் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தோ அல்லது அவர்களின் தேவைகள் குறித்தோ முன்வைக்கப்படவில்லை.
இடம்பெற்ற வாக்குவாதம் தங்களுக்கு இடையிலான தனிப்பட்ட வன்மங்களை கொட்டுவதாக மட்டும்தான் காணப்பட்டதுடன் இவ்வாறான தலைமைகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை எவ்விதத்தில் நகர்த்திக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக தற்போது மாறியுள்ளது.
சாதாரணமாக ஒரு நாள் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நேர்த்தியாக நடத்த முடியாத தலைமைகளை நம்பி ஐந்து வருடத்தை நம் மக்கள் ஒப்படைத்திருப்பது என்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
மக்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்தில் மாறி மாறி அவமரியாதையாக பேசுவதும், தங்களுக்கு இடையிலான சொந்த பிரச்சினைகளை வாதாடுவதும் சுற்றி இருப்பவர்கள் அதனை தடுக்காமல் ரசித்து பார்த்து சிரிப்பதும் என சிறுபிள்ளைத்தனமாக தமிழ் அரசியல் தலமைகளை காணுவது பாலர் பாடசாலை பிள்ளைகளை நினைவூட்டுகின்றது.
ஒரு சபை என்று வரும் போது சபை நாகரீகம் என்பது அன்றிலிருந்து இன்று வரை பேணப்படக்கூடிய விடயமாக காணப்படுகின்றது. இருப்பினும் இங்கு சபை நாகரீகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் தேர்வு செய்த மக்கள் நம்மை கவனித்துகொண்டு இருக்கின்றார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் சிலர் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.
கூட்டம் என்று வரும் பொழுது அதில் கலந்துகொள்ளும் அரசியல் தலைமைகள் அதனை எவ்வித சூழலாக இருப்பினும் மக்களுக்காக சிந்திக்க வேண்டிய கடமை உள்ளது. ஆனால் இங்கு கூட்டத்தை விட்டு வெளியேறுவதுதான் நம் தலைமைகளின் பலமாக காணப்படுகின்றது.
இதனை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் பார்த்தால் அது அவர்களிடத்தில் தமிழ் தலைமைகளின் அரசியல் ஆளுமைகளை வெட்ட வெளிச்சம் போட்டு அவர்களே காட்டியதாக அல்லவா அமையும்.
அண்மைக்காலமாக தமிழ் தலைமைகள் இடத்திலான ஆரோக்கியமான கலந்துரையாடல் என்பது பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் இது தமிழர் பிரதேசத்தில் தென்னிலங்கை அரசியல் ஊடுருவலுக்கு எதிர்காலத்தில் பெரும் வாய்ப்பாக அமையும்.
இவ்வாறே தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்வார்களாக இருந்தால், ஐந்து வருடமும் குரங்கு கையில் மாட்டிய பூமாலை போலத்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் நகரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 20 மணி நேரம் முன்
