சஜித் அணியிலிருந்து வெளியேறத்தயாராகும் சிறுபான்மை கட்சிகள்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிறுபான்மை அரசியல் கட்சிகள், கூட்டணியை விட்டு வெளியேறி தற்போதைய அரசாங்கத்தில் சேரத் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அந்த ஊடக தகவல்களின்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பங்காளிகளாக உள்ள சிறுபான்மை கட்சிகள், சஜித் அணியின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளன.
கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து விலகும் பிரதான கட்சி
கூட்டணி உருவாக்கப்பட்டபோது அடிப்படையாகக் கொண்ட அசல் கொள்கைகள் மற்றும் கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து பிரதான கட்சி விலகிச் செயல்படுவதாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பழனி திகம்பரம் மற்றும் மனோ கணேசன் போன்ற சிறுபான்மை கட்சித் தலைவர்கள் கூட்டணியின் சில முடிவுகளைப் பகிரங்கமாக விமர்சித்து வருவதாக அந்த ஊடகம் குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சி நெருக்கடியை மேலும் வெளிப்படுத்தும் விதமாக, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், சமீபத்தில் குருநாகலையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் நேரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
பகிரங்கமாக விமர்சித்த ரிஷாத் பதியுதீன்
அவர், தான் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒருபோதும் அடிமை அல்ல என்றும், ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே என்றும், அதில் தான் ஒரு பங்காளியாக மட்டுமே இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த நிலைமை குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த ஐக்கிஜய மக்கள் சக்தியின் சக்திவாய்ந்த தலைவர் ஒருவர், அனைத்து கூட்டணி அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் நிறைவேற்றப்படும் வகையில், கட்சி எப்போதும் கூட்டாகவே முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
தேர்தல் ஒப்பந்தங்களின்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற இடங்கள் உட்பட பல சலுகைகள் எந்தவித சமரசமும் இன்றி அந்தக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சில சிறுபான்மை கட்சித் தலைவர்கள், நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உள்நோக்கத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த வழியில் ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |