வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்போரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்!
காலம் தாமதிக்காது சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் எனவும் தமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கில் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மாதாந்தம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவரும் குறித்த போராட்டம் இன்றைய தினமும் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் வவுனியா (Vavuniya) ஆகிய பகுதிகளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சங்க அலுவலகம்
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, எமக்கு தீர்வு சர்வதேசத்திடம் இருந்து தான் கிடைக்கும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
சர்வதேச நீதி
இதனை தொடர்ந்து, வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது காலம் தாமதிக்காது சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், தமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |