அம்பாறையில் நாளை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் (Ampara) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (16) காலை குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இன்று (15-06-2025) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இவ்வாறு குறிப்பிட்டார்
இன்று வரை நீதி கிடைக்கவில்லை
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியை பெற்றுத்தருவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தைப் பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருக்கின்றோம். ஐ.நா கூட்டத் தொடரிலே எங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்த வேண்டும்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதுடன் செம்மணி, கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னார் புதைகுழிகளையும் பார்வையிடுவதுடன் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா
