சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீரர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி(moeen ali) அறிவித்துள்ளார்.
சகலதுறை வீரரான மொயின் அலி இங்கிலாந்து (england)அணிக்காக 2014 முதல் 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 92 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களையும் அவர் அடித்துள்ளார். மேலும் மூன்று வடிவங்களிலும் 366 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதல் ஆசிய வம்சாவளி கிரிக்கெட் வீரர்
ரி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு அணித்தலைவராக பதவியேற்ற முதல் ஆசிய வம்சாவளி கிரிக்கெட் வீரர் மொயின் அலி ஆவார். 2019 இல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022 இல் ரி 20 உலகக் கோப்பையையும் இங்கிலாந்து வென்றபோது அவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் மொயின் அலி தனது 37 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
அடுத்த தலைமுறைக்கான நேரம்
எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத அவுஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம், இது எனக்கும் விளக்கப்பட்டது. இது சரியான நேரம் என்று உணர்ந்தேன். நான் எனது பங்கைச் செய்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |