யாழ்ப்பாணத்தில் நடக்கும் நூதன திருட்டு - வீதிகளில் வாகனங்களில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிப்போர் மீது தமது வாகனங்களால் திட்டமிட்டு மோதியும், வாகனங்களுக்கு முன்னால் தமது உடைந்து போன கையடக்க தொலைபேசிகளை போட்டு விட்டு, அவற்றுக்கு இழப்பீடு என கோரி பணத்தினை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
அதன் போதே ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் புதிய வடிவிலான பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.
வாகனத்தின் மீது திட்டமிட்டு மோதி
வீதியில் பயணிப்பவர்களின் வாகனத்தின் மீது திட்டமிட்டு மோதிவிட்டு, தமது கைத்தொலைபேசி அல்லது மோட்டார் வாகனம் சேதமடைந்துவிட்டதாகக் கூறி அவர்களிடம் இழப்பீடு கோரிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகிறது.

இத்தகைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தப் காவல்துறையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதுடன் அவர்களால் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது.
இது திட்டமிட்ட குழுக்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிச்சையெடுப்பதற்குப் பயன்படுத்த படுகின்றனர் என ஆளுநர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறையினர், உள்ளூராட்சி மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், பொது இடங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |