விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இதன்போது, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்
விளக்கமளித்த அதிகாரிகள்
அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
"டித்வா" சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |