செஞ்சோலை படுகொலையின் போது உயிரிழந்தோருக்கு நினைவுத்தூபி : சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
செஞ்சோலை படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக செஞ்சோலை வளாகத்தில் நினைவுத்தூபி அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு அண்மையில் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற போது தவிசாளரினால் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களின் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது.
தொடர் கோரிக்கை
தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றுகூடியிருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து இலங்கை விமானப்படை விமானங்கள் நடாத்திய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்களும் உயிரிழந்திருந்தனர்.
குறித்த மாணவிகளின் நினைவாக இடைக்கட்டு வளாகத்தில் நினைவுத்தூபி ஒன்றை அமைக்க வேண்டும் என பலராலும் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆளுகைக்கு உட்படுத்தி அங்கு நினைவுத்தூபி ஒன்றை அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
