நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிப்பு: மீண்டும் சுகாதார அமைச்சராக ரம்புக்வெல்ல
சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மேலதிகமாக 40 வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு
இந்த பிரேரணை மீதான விவாதம் புதன், வியாழன் மற்றும் இன்று வெள்ளிக் கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் இன்று மாலை 5.40 அளவில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு எதிராக 113 பேரும் ஆதரவாக 73 பேரும் வாக்களித்துள்ளனர்.
இதன்பிரகாரம் 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சராக தொடரும் வாய்ப்பை கெஹேலிய ரம்புக்வெல்ல பெற்றுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
ஐக்கிய மக்கள் சக்தியை தவிர டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுயாதீன மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களின் உத்தர லங்கா கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்பை அடுத்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அடுத்த அமர்வானது செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.