தொழிலாளர்களின் 1000 ரூபா வேதன விவகாரம்- ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணை!
தோட்டத் தொழிலார்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை நேற்று நடைபெற்ற பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் முன்வைத்திருந்த நிலையில், இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கோரிக்கையாகும்.
இதன் இன்றைய நாணயமாற்றுப் பெறுமதி 1430 ரூபாவாகும் எனவே தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாளாந்தம் செய்து வருகின்ற தேயிலை கொழுந்து பிடுங்கும் தொழிலில் பாரிய பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக குளவி கொட்டுதல், சிறுத்தை போன்ற விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள், அட்டை கடிகள் மற்றும் மலை ஏறுதல் போன்ற அச்சுறுத்தல்கள் இவ் வேலையில் காணப்படும் மிகப்பெரிய சவால்களாகும் அத்துடன் தேயிலை கம்பெனிகளின் முகாமையாளர்கள் தொழிலாளர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை. 1950ம் ஆண்டுகளில் இருந்ததைப் போன்று அடிமைத்துவ முகாமையும் தொழிலாளர்களது உரிமைகள் பேணப்படாததுமான கலாசரமே நிலவி வருகிறது.
ஆகவே எனது பிரேரணையிற்கான தீர்மானமாக 1) அடிப்படைசம்பளம் 1000 ரூபாவழங்க வேண்டும் 2) மாதாந்த வேலை நாட்கள் குறைந்தது 24 நாட்கள் இருக்க வேண்டும் 3) நாளாந்த சம்பளத்திற்கான தேயிலையின் நிறை அநியாயமாக அதிகரிக்கப்படக்கூடாது. 4) தொழிலாளர்கள் மரியாதையுடன் முகாமை செய்யப்பட வேண்டும். 5)தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களுக்கான இழப்பீடுகள், கொடுப்பனவுகள் மற்றும் போதியளவான விடுமுறைகளும் வழங்கப்பட வேண்டும்.
இவை போன்ற தொழிலாளர்களது உரிமைகளும் 1000 ரூபா நாளாந்த சம்பளமும் என்கின்ற விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டு நீதியான ஒரு கூட்டு ஒப்பந்தம் இம்முறை நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி, பிரதமர் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட துறை அமைச்சு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு போன்றவர்களுக்கு அனுப்பி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.