ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைமையகத்தில் நேற்று (22) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட பிரேரணைகளாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து கூட்டணியை உருவாக்குவதற்கு கட்சித் தலைவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் இதுவரை நடந்த பணிகள் குறித்து பொதுச் செயலாளரால் செயற்குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டன.
சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம்
கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால முன்னெடுப்புகளின் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து செயற்குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, கூட்டணியைக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தையும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கும் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்து இதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான அத்துலசிறி சமரகோன், மஹிம் மெண்டிஸ் மற்றும் நெவிஸ் மோராயஸ் ஆகியோர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் தீர்ப்பில் இருந்து, கட்சிக்கு பெற்றுத் தந்த நன்மதிப்பு போலவே நாட்டு மக்களுக்கு முக்கியமான இந்த தீர்ப்பை எடுப்பதில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு அம்மூவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
அத்துடன் இந்த மனுவுக்காக முன்னிலையான அதிபர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கவும், நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாசவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை, செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்ததுடன், செயற்குழுவும் இதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியது.
டயனா கமகே தாக்கல் செய்த வழக்கு
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையாகி, குறித்த தீர்ப்பு கட்சிக்கு வெற்றியாக எடுப்பதற்கு செயற்பட்ட அதிபர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும்அதிபர் சட்டத்தரணி பர்மான் காசிம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிய அமித பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தல், மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குதல் மற்றும் கட்சியில் இருந்து நீக்குதல் தொடர்பாக கட்சித் தலைவர் எடுத்த தீர்மானத்துக்கு செயற்குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |