மக்களின் உணர்வுகளை அவமதித்த சந்திரசேகர் எம்.பியின் உரை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கடந்த நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (03.11.2026) நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள், போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புகளினதும் அதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்களினதும் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த போராட்டத்தை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தோல்வியடைந்த மற்றும் முறைகேடான அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்ததாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஹரக் கட்டாவின் கறுப்புப் பணம்: காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பாலமாக செயற்பட்ட பௌத்த துறவி!
சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
எனினும், இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ ஏற்பாடு செய்யப்படவில்லை என ஒன்றியம் மறுத்துள்ளது.

கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு ஏற்பாடு செய்த மக்கள் போராட்டமே இது எனவும் விளக்கமளித்துள்ளது.
மேலும், அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்கள் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகள், கடற்றொழில் சங்கங்கள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இப்போராட்டத்தில் பங்கேற்கத் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்பின் அடிப்படையிலேயே பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுமே போராட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |