நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான புதிய விதிகள்! பிரித்தானிய அரசின் அறிவிப்பு
பிரித்தானியாவில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட உரிமை (Indefinite Leave to Remain – ILR) பெறுவதற்கான நடைமுறையில் முக்கியமான மாற்றங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது பல குடிவரவு விசா வகைகளுக்கு நடைமுறையில் உள்ள ஐந்து ஆண்டு தகுதிக் காலம் பொதுவாக பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த மாற்றம் 'Earned Settlement' எனப்படும் புதிய குடியேற்றக் கொள்கையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, பிரித்தானியாவில் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வசித்துள்ளார் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது.
குடிவரவு விதிமுறை
மாறாக, அவரது வருமானம், தொழில் பங்களிப்பு, வரி மற்றும் தேசிய காப்புறுதிப் பங்களிப்புகள், ஆங்கில மொழித் திறன் மற்றும் குடிவரவு விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளமை போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.

புதிய ஏற்பாட்டின் கீழ் ஆண்டுக்கு 125,140 பவுண்டுகளுக்கு மேல் வருமானம் பெறும் குறிப்பிட்ட உயர் வருமானப் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, ஆண்டுக்கு 50,271 பவுண்டுகளுக்கு மேல் வருமானம் பெறும் தகுதியானவர்களுக்கும் குறிப்பிட்ட மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சில தொழில்துறையினருக்கும் ஐந்து ஆண்டு வழிமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சலுகைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் தானாகவே பொருந்தாது. சம்பந்தப்பட்ட தொழில், வருமானம் மற்றும் ஏனைய தகுதிகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும்.
மறுபுறம், மேற்குறிப்பிட்ட சலுகைகளுக்குத் தகுதி பெறாத பெரும்பாலான குடியேறிகள் பத்து ஆண்டுகள் காத்திருந்த பின்னரே நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
குறிப்பாக, Care Worker எனப்படும் பராமரிப்புப் பணியாளர்கள் தொடர்பில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் குறிப்பிட்ட சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புப் பணிவழியில் இணைந்த சிலருக்கு பழைய ஐந்து ஆண்டு நடைமுறையின் கீழ் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான இடைக்காலப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து Care Workers-க்கும் ஐந்து ஆண்டு சலுகை கிடைக்கும் எனக் கருத முடியாது. இந்தப் புதிய மாற்றம் ஏற்கனவே பிரித்தானியாவில் வசித்து வரும் குடியேறிகளையும் பாதிக்கக்கூடும் என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும்.
நிரந்தர வதிவிட உரிமை
புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் நேரத்தில் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்காதவர்கள், தங்களது விசா வகை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் புதிய விதிகளுக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், ஏற்கனவே நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றவர்களின் உரிமை இந்த மாற்றத்தால் பறிக்கப்படாது.

மேலும், அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழித் திறன், தேசிய காப்புறுதிப் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன்கள் தொடர்பான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
குடிவரவு விதிகளை மீறியவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான காத்திருப்புக் காலம் மேலும் நீடிக்கப்படலாம். அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கும் தனியான விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான சட்டபூர்வ வழிகளில் வந்த அகதிகளுக்கும் சட்டவிரோதமாக அல்லது சிறுபடகுகள் மூலம் வந்தவர்களுக்கும் ஒரே மாதிரியான நிரந்தர வதிவிட நடைமுறை பொருந்தாது என அரசாங்கத்தின் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த மாற்றங்கள் 2026 நவம்பர் மாத அறிவிப்பைத் தொடர்ந்து 2027ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி சட்டத் திருத்தங்கள் மற்றும் அமுலாக்கத் திகதிகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதனால், தற்போது Skilled Worker, Health and Care Worker உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் பிரித்தானியாவில் வசிப்பவர்கள் தங்களது விசா வகை, வருமானம், தொழில் மற்றும் பிரித்தானியாவில் வசித்து வரும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய விதிகள் தமக்குப் பொருந்துமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின் முக்கியமான அம்சம், நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான காலம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதும், தனிநபரின் தகுதிகளுக்கு ஏற்ப மூன்று, ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் என மாறுபடலாம் என்பதுமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |