தவறாக பயன்படுத்தப்படும் சட்டம்: காவல்துறையினரை குற்றம் சாட்டும் எம்.பிக்கள்!
இலங்கையில் (Sri Lanka) முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் அப்பாவி பொது மக்கள் கைது செய்யப்படுவதாக இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன்படி, சிறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் யுக்திய நடவடிக்கையின் கீழ் குற்றவியல் சட்டத்துக்கமைய கைது செய்யப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற சமன்பிரிய ஹேரத் (Samanpriya Herath) சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் குருநாகல் (Kurunegala) பகுதியில் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடாது நண்பர்களுடன் வீதியில் சுற்றித்திரியும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான கைது நடவடிக்கை
இவ்வாறாக கைது செய்யப்படும் தரப்பினர் குற்றவியல் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை சிறந்ததாக காணப்பட்டாலும் சில காவல்துறை அதிகாரிகள் அதனை தவறாக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை கவனத்தில் எடுத்து, யுக்திய வேலைத்திட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
யுக்திய நடவடிக்கை
இதேவேளை, குருநாகல் மாத்திரமின்றி இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் வீணாக யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரேம்நாத் சி தொலவத்த (Premanath C. Dolawatte) சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக யுக்திய நடவடிக்கை தவறான விதத்தில் விமர்சிக்கப்பட்டு வருவதாக பிரேம்நாத் சி தொலவத்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |