தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா என்பவரே நிராகரித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறித்து அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடை கோரி விண்ணப்பம்
இந்த ஊர்தி கிழக்கு மாகாணத்தில் பயணித்த நிலையில் தற்போது வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடைவிதிக்குமாறு கோரீ புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மற்றும் முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
அதேவேளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை கோரி விண்ணப்பித்த நிலையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் அதனையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.