தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை : கொழும்பில் காவல்நிலையங்களுக்கு பறந்த உத்தரவு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்காக கொழும்பு நகரிலோ அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களிலோ அமைதிக்கு குந்தகம் மற்றும் பொது அடக்குமுறை ஏற்பட்டால் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 12 கொழும்பு காவல்நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த உத்தரவானது கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸால் இன்று (19) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (01) பிரிவின் பிரகாரம், இந்த நினைவேந்தல் நடத்தப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறும், ஆபத்தும் ஏற்படக்கூடும் எனவும், கொழும்பை சுற்றியுள்ள பல காவல்நிலையங்களின் கோரிக்கையை நீதவான் கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
ஓகஸ்ட் 29, 2011 அன்று, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட எண் 1721/2 ஆவணத்தின் மூலம் ஈழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை நினைவு கூர்வது நாட்டின் அமைதியான மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும் என கெசல்வத்தை காவல்துறையினர் நீதிமன்றதில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, கெசல்வத்தை, பிடகுத்வ, அடுருப்புவீதிய, மாளிகாவத்தை, வெல்லவீதிய, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட, வெலிக்கடை, பொரளை, குருதுவத்தை ஆகிய காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.