முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 22 கிலோ கஞ்சா பொதிகள் (படங்கள்)
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கஞ்சா பொதிகளை முல்லைத்தீவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று(7) காலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
கடற்கரை முழுவதும் சோதனை
அப் பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை கண்டனர். இதனை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து முல்லைத்தீவு காவல்துறையினர் 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
மொத்தமாக 11 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் மேலும் கஞ்சா பொதிகள் ஒதுங்கியுள்ளதா என கடற்கரை முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.