துணுக்காய் வலயத்தில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதியில் 27 கல்விப் பொது தராதர சாதாரண தர பாடசாலைகள் இருக்கின்றன.
இதில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் மூன்று பேர் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலையில் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
திறமைச் சித்தி

இதனடிப்படையில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் பாலசுப்பிரமணியம் திருவேணி, ஸ்ரீபாஸ்கரன் துர்ஷிகன், சுரேஷ் தர்ஷிகா ஆகியோர் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனை விடவும் துணுக்காய் கல்வி வலயத்தில் மல்லாவி மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளையும் பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ பெறுபேறுகளையும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி ஒருவர் 9ஏ சித்திகளையும் கற்சிலை மடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி ஒருவர் 9ஏ சித்திகளையும் பெற்று துணுக்காய் வலயத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.






