இந்திய அரசின் உதவியில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவமற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.
மருத்துவமனையில் உள்ள வசதிகள்
குறித்த மருத்துவமனையில் சிகிச்சைகளை வழங்கும் 08 விசேட நிபுணத்துவ அலகுகள்காணப்படுவதுடன், மொத்தமாக 195 நோயாளர்களுக்கான கட்டில் வசதிகளுடன் கூடியதாக உள்ளது.

நோயாளர்களுக்கான குறைந்த செலவுடன் உயரிய தரப்பண்பான சுகாதார சிகிச்சைகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக மூன்றாம் நிலை சிகிச்சை நிறுவனமாக இயங்குகின்ற பிரதான மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள படிமுறைகளின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு நிதியுதவி
அதற்கு 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிதியுதவியாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த நிதியுதவியைப் பயன்படுத்தி இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |