கண்ணீரால் நிறைந்தது முல்லைதீவு சுனாமி நினைவாலயம்!
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன.
இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம் பெற்றதோடு, அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி உயிரிழந்த தமது உறவுகளை அஞ்சலித்தனர்.
சுனாமி நினைவாலய வளாகம் மக்களின் கண்ணீர் மற்றும் அழு குரல்களால் நிறைந்து காணப்பட்டது.


