தமிழர்களின் காணிகளை சுரண்டுகிறது வனவளத் திணைக்களம் - ரவிகரன்
வனவளத் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளுக்கு எல்லைக்கல் இடுவதில் காட்டும் அவசரத்தினை, காணிகளை விடுவிப்பதில் காட்டுவதில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வனவளத் திணைக்களம் காணிகளுக்கு எல்லைக்கற்களை இடும்போது பிரதேச செயலகத்திடமிருந்து பெரும்பாலும் அனுமதிகளைப் பெறுவதில்லை. அத்தோடு காணிகள் தொடர்பில் பொதுமக்களிடமோ, கிராம அலுவலர்களிடமும் ஆராய்வதில்லை.
ஒருமுறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில், வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தம்மால் 15,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளுக்கு எல்லைக்கற்களை இட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக வனவளத் திணைக்களம் எல்லைக்கற்களை இட்டுள்ள அத்தனை காணிகளும் எமது தமிழ் மக்கள் பயன்படுத்திய காணிகளாகும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கொக்குளாய், கொக்குத்தொடுவாய், ஒதியமலை போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியிடங்களில் குடியேறியிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் வாழ்ந்த எமது மக்களின் காணிகள் காடுகளாக காட்சி தருகின்றன.
குறித்த காணிகளுக்கே தற்போது வனவளத் திணைக்களம் தனது எல்லைக்கற்களை இட்டுள்ளது என்றார்.