நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்)
ஈழத்தமிழ் மக்களின் வலிசுமந்த முள்ளிவாய்க்கால் தினம் நெருங்கும் நிலையில், அதற்கான தடைகளை சிறிலங்கா காவல்துறை, இராணுவம் ஏற்படுத்தி வரும் நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களது ஆன்மாவை வைத்து வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு உரிமையுண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களின் ஆட்சிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு காவல்துறையினரால் நீதிமன்றத் தடைகள் பெறப்பட்டு தடுக்க முற்படுகின்ற போதிலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், இம்முறையும் நினைவேந்தல்களுக்கு தடை ஏற்படுமா? என ஊடகவிலாளர்கள் வினவியபோது, ரணில் விக்ரமசிங்க இந்தப் பதிலை வழங்கியதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நல்லாட்சியில் சகல நினைவேந்தல்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, அதேபோன்று இனியும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கிற்கு ஒரு நீதி, வடக்கிற்கு ஒரு நீதி என இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நேற்றையதினம்(14) பதிவாகியிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் காவல்துறையினரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், மக்களை அச்சமடையச் செய்யும் நோக்குடன் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக காவல்துறையினர், இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஒரு அங்கமாக, குறித்த பகுதிக்குச் சென்றுவந்த ஊடகவியலாளரை மறித்த காவல்துறையினர் ஆவணங்களை கோரி, ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ள போதிலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அண்மித்த பகுதிகளில் “இன்று (15) இச்செய்தி பதிவேற்றும் வரை” காவல்துறையினரும், இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.