தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களின் உயிரை காப்பாற்றிய கஞ்சியை நினைவூட்டும் வகையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பல்வேறு தரப்பினராலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழின அழிப்பின் 16 ஆண்டு நினைவையொட்டி நிகழ்வு
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆண்டு நினைவையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன், தமிழ் மக்கள் கூட்டணியின் வலி. வடக்கு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திருமலை தம்பலகமம் நாயன்மார் திடல் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இதேவேளை திருகோணமலை தம்பலகமம் நாயன்மார் திடல் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை முன்னெடுக்கப்பட்டது.
இதனை தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்தனர். இதில் குறித்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர். இதில் கட்சியின் புதிய உள்ளூராட்சி பிரதேச சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் இன்று (17) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான விடயமாக மாறியுள்ளன.
இதன்போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









