திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
புதிய இணைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (16.05.2025) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.
மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர். நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.
இரண்டாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் - இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேச மக்கள் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி, பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.05.2025) திருகோணமலை - 3ம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தம்
திருகோணமலை மாவட்டத்தின் இளையோர் ஒன்றிணைந்து இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் உணவாக உற்கொண்ட உப்புக் கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டத் தலைவர், “இலங்கை அரசானது தமிழ் மக்கள் மீது முன்னெடுத்த அநீதியை அடுத்த சமூகத்திற்கு கடத்துவது அவசியமான ஒன்றாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த ஒரு தமிழ் பிரதியமைச்சர் இனப்படுகொலை குறித்து இதுவரை கருத்து வெளியிடாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூதூர் - இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (2025 மே 15ஆம் ) திகதி, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில், காலை 9.00 மணியளவில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் மொத்தம் 39 பொதுமக்கள் கலந்து கொண்டனர். துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாது, நீதி தேடும் ஒரு சமூக அழைப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
போர் முடிந்த பின்னரும் நீதி வழங்கப்படாதது குறித்த கேள்விகளை உயிருடன் வைத்திருக்க, இவ்வாறு மக்கள் ஒருங்கிணைந்து நினைவு நிகழ்வை அனுஷ்டிப்பது முக்கியமான நகர்வாகும்.
தோப்பூர் - பாட்டாளிபுரம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலிம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
