மாத்தறையில் இடம்பெற்ற கொடூர கொலை- களமிறங்கியுள்ள விசேட காவல்துறை குழு!
மாத்தறை, மாலிம்பட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பிள்ளையின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாத்தறை, மாலிம்பட வடக்கு பிரதேசத்தில் மனைவியை, கணவர் அடித்து கொலை செய்ததோடு, பிள்ளையையும் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கணவர் கடந்த 9 ஆம் திகதி இரவு தனது மனைவி மற்றும் மாமியாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக மாமியாரை கடுமையாக தாக்கிவிட்டு மனைவியையும் அடித்துக்கொலை செய்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் மாலிம்பட பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஹர்ஷா நிஷானி களுஆராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்த சம்பவத்தின் பின்னர் 2 வயதுடைய பிள்ளையுடன் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.