யாழ்ப்பாணத்தில் நடந்த பயங்கரம் - சம்பவ இடத்தில் அலவாங்கு, கத்தி..! (படங்கள்)
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து இன்று மாலை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அந்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி தான் வசித்த புத்தூர் சந்தியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் குறித்த இளைஞரை பராமரிப்பதற்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இளைஞரோடு இருந்த நோயாளர் நலன்புரி சங்கத்தை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நாகராஜா என அழைக்கப்படும் நோயாளர் நலம்புரி பராமரிப்பாளர் இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரும் இளைஞரின் உறவினர் ஒருவரும் வந்துள்ளனர்.
புகையிரத வீதியில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் கருத்திருந்துள்ளார்.
அலவாங்கால் குத்தி கொலை
இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரத வீதியில் அமர்ந்திருந்துள்ளார்.
இதனால் வீட்டுக்குள் சென்ற நோயாளர் பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவருக்கு நீண்ட நேரமாக தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால் புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்றுள்ளார்.
இதன்போது அவரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன் என இளைஞர் தெரிவித்துள்ளார்.
பலத்த காயங்களோடு இறந்து கிடந்த நபர்
இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் முகத்தில் பலத்த காயங்களோடு இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
