பிரதமரின் தீர்வுக்கு நான்கு நாட்கள் மட்டுமே.!தொடர் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன்(15) புதன் கிழமை 29 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது விவசாய காணிகளை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜீவனோபாயம் பாதிப்பு
தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கும் முத்து நகர் விவசாயிகள் தற்போதைய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தும் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த விவசாயிகளின் சுமார் 800 ஏக்கர் நெற் செய்கை விவசாயத்தை அபகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
பிரதமரின் இரண்டாம் கட்ட தீர்வு
பிரதமரின் இரண்டாம் கட்ட தீர்வுக்கான வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் அதற்காக இன்னும் 04 நாட்களே உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு, 53 வருட காலமாக விவசாயம் செய்து வந்த நிலம் எங்கே,எங்களை வாழ விடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மழை பெய்யக் கூடிய நிலையிலும் மேகங்கள் கறுத்த நிலையிலும் கூட போராட்டத்தை தொடர்ந்தும் குறித்த முத்து நகர் ஒன்றினைந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


