அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் முத்துநகர் விவசாயிகள்!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி சூரிய மின் சக்திக்காக அபகரிக்கப்பட்ட நிலையில் அதனை விடுவிக்குமாறு அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த காணியை இலங்கை துறைமுக அதிகார சபை இதனை கையகப்படுத்தி இரு தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விவசாய காணியை நம்பியே மக்கள் விவசாயம் செய்து வந்ததாகவும், சுமார் 53 வருடங்களாக இங்கு நெற் பயிர் செய்கை விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளிலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சூரிய மின் சக்தி உற்பத்தி
தற்போது சூரிய மின் சக்தி உற்பத்திக்காக சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளை வேலி அடைத்து தங்களுடைய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் 800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுளுளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த 29.07.2025 ம் திகதி அன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே தங்களுக்கு நீதியான நியாயமான முறையில் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை விடுவித்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
