முன்னாள் போராளி கண்ணீர் கதை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்
யுத்தக் களத்தில் காயப்பட்டு ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் - மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப்பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' (Siddu) முறையில் பணம் கட்டியுள்ளார்.
ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள், காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
உடல் உறுப்பு விற்பனை
தான் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு, மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர் என்றுத் தெரிவித்துள்ளார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளதாக குறித்த பெண் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தீராத கடன் சுமை
தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் "பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியதாக கவலையுடன் கூறியுள்ளார்.
சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் "இன்னும் வட்டி மீதமுள்ளது" எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண், தற்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |