ஆயுதப்படை தினத்தில் மியன்மார் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூரப் படுகொலை!
மியன்மாரில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மியன்மாரில் வெளியாகும், நவ் செய்தி போர்டல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொடூர படுகொலைச் சம்பவம் நேற்று அந்நாட்டு ஆயுதப்படை தினத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் கலவரத்தில் இராணுவம், ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டு மாநில தொலைக்காட்சியில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் யாங்கோன், மாண்டலே மற்றும் பிற நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மியன்மாரில் வெளியாகும், நவ் செய்தி போர்டல் வெளியிட்டுள்ள செய்திப்படி, நாடு முழுவதும் நேற்று மட்டும் 91 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.