இராணுவ ஆட்சிக்கு எதிராக வன்முறையில் இறங்கிய மக்கள்! ஆங் சான் சூகியின் அலுவலகம் இராணுவத்தால் உடைப்பு
மியன்மாரில், ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகம் அந்நாட்டு இராணுவத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆங் சான் சூ கியின் அலுவலகத்துக்குள் இராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், அத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, கடந்த வாரம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் ஜனநாயக முறை வர வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்த சில மணி நேரத்தில் கட்சியின் தலைமையகம் சோதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. கூட்டத்தைக் கலைக்க ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. நான்கு பேர் அதனால் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்ற புதிய விதிமுறையை மீறியதற்காகச் சுமார் 200 பேருக்கும் மேல் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.