பேரழிவுக்கான அறிகுறி..! பாம்பனில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்
பாம்பன் (Pamban) கடற்றொழிலாளர்களின் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீன் (Oar Fish) சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டூம்ஸ் டே மீன் கரையொதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீண்ட கால நம்பிக்கை என மீன்வளத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் வலையில் இந்த மீனானது சிக்கியுள்ளது.
மக்கள் ஆர்வத்துடன் பார்வை
முதன்முறையாக 10 கிலோ எடையும் 05 அடி நீளமும் உடைய இந்த மீன் பிடிபட்டதால் பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “துடுப்பு மீன் (Oar fish) நீளமான மற்றும் சதைப் பிடிப்பற்ற பட்டையான ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய மீனினமாகும்.
இவை மித வெப்ப மண்டல கடற்பகுதிகளிலும் அரிதாகவே காணப்படும். இவை அதிகபட்சமாக 16 மீற்றர் நீளம் வரையிலும் வளரக்கூடியது.
கரையொதுங்கினால் பேரழிவு
இந்த மீன் கரையொதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீண்ட கால நம்பிக்கையாகும். இதனால் இதற்கு டூம்ஸ் டே மீன் என்ற பெயர் ஏற்பட்டது.
ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான ஆதாரமும் இப்போது வரை இல்லை.
அதனால், துடுப்பு மீன் பிடிப்படுவதோ அல்லது கரையொதுங்குவதால் பேரழிவு ஏற்படும் என்பது வெறும் மூட நம்பிக்கையே என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
