ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துணிந்து ஆஜராகிய நடராஜன்! நாம் தமிழர் கட்சி நிர்வாகி
மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாக்கியராசன்.சே. பதிவு செய்துள்ள டுவிட்டர் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை குறிப்பிட்டுக்காட்டி அவர் பதிவிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாக்கியராசன்.சே. பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“ராஜீவ்காந்தி இறந்த வழக்கில் உலகிலேயே அதுவரை வழங்கப்படாத தீர்ப்பாக 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கிய அந்நேரத்தில், மேல் முறையீடு செய்ய ஐயா பழ.நெடுமாறன் மற்றும் மூத்தவர் தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் பலரிடம் கேட்டும் ஒருவரும் வழக்காட முன்வராத பொழுது, விடுதலைப்புலிகளின் வழக்கு என்று தெரிந்தும் பல நெருக்கடிகளையும் மீறி துணிந்து ஆஜராகி பல ஆதாரங்களையும் சட்டநுணக்கங்களையும் எடுத்து வைத்து வாதாடி 19 பேரை விடுதலை செய்ய காரணமான மகத்தான மனிதர்.
பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்திருக்கிற N.நடராசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்” என பதிவு செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நிதி திரட்டிதான் வழக்குகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
