நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்
தமிழின அரசாட்சியின் சின்னமாக விளங்கும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கு திடமான நிலையை ஏற்படுத்தி தருமாறு வடக்கு ஆளுநரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு சீ.வீ.கே சிவஞானம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே “நல்லூர் சங்கிலியன் பூங்கா” 1989 வரை செம்மணி வீதி என்பது அதற்கு வடக்காக அமைந்துள்ள தேவாலயத்துக்கு எதிராக பருத்தித்துறை வீதி வரையானதாக இருந்தது. இதற்கு தெற்காகவும், பருத்தித்துறை வீதிக்கு கிழக்காகவும் முத்திரை சந்தையும், மாநகர சபையால் வடகைக்கு கொடுக்கப்பட்ட கடைகளும் இருந்தன.
நல்லூர் சங்கிலியன் பூங்கா
1989 இல் பருத்தித்துறை வீதியில் இருந்து தேவாலயத்துக்கு நேராகச் சென்ற செம்மணி வீதியின் பகுதி தெற்குப் பக்கமாக இருந்த தனியார் காணிகளை தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளபடி செம்மணி வீதி மாற்றப்பட்டு, நேரான வீதியாக அமைக்கப்பட்டது.
இதனால் இந்த செம்மணி வீதியின் வடக்காக செட்டியார் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியை வடக்கு எல்லையாகக் கொண்ட காணியாக ஒன்றிணைக்கப்பட்டது. இந்த முழுக் காணியும் மாநகர சபையின் ஆட்சியின் கீழ் இருந்து வருவது வரலாறு.
1966 ஆம் ஆண்டின் நில அளவை நாயகத்தின் வரைபடத்தின்படி அப்போதே இந்கு சந்தை இருந்தமை உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தைகளின் நிர்வாகம் நாடு பூராகவும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்திற்குட்பட்டது என்பது சட்டப்படி தெளிவானது.
இந்தப் பகுதி யாழ்ப்பாண மாநகர சபையின் “சங்கிலி தோப்பு” என்ற பெயரிலான 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் 1950 ஆம் ஆண்டு ஸ்ரான்லி கல்லூரி மாணவனாக முத்திரைச் சந்தையைக் கடந்து சென்ற அனுபவமும், 1960 இல் யாழ்ப்பாண மாநகர சபையின் ஒரு அலுவலராக சேர்ந்தபொழுது மேற்குறிப்பிட்ட சந்தையும், கடைகளும் மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் இருந்தமையும் 1978 இல் மாநகர சபையின் ஆணையாளராக இருந்த பொழுது சிறுவர் பூங்கா நிறுவிய அனுபவமும் உண்டு.
நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள்
ஈழத் தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளங்களாக இந்தப் பகுதி விளங்குகிறது. இத்தனை பெருமைக்குரிய மண்ணில் உள்ள ஒரேயொரு வெளி நிலமான முத்திரைச் சந்தைப் பகுதியில் மன்னன் சங்கிலியனின் பெயர் நீண்டு நிற்க வேண்டும் என்ற எண்ணத்தின்படியே, செம்மணி வீதியை இடம்மாற்றி முழுப் பகுதியையும் ஒன்றிணைத்து "சங்கிலியன் பூங்கா" 1989 இல் அமைக்கப்பட்டது.
அது மாநகர நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இந்த நிலையில் நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் இந்த நிலம் மாநகர சபைக்கு உரித்தானது அல்ல என்ற தோரணையிலும் அது அரச காணி (State Land) என்ற தோரணையிலும் இங்கு நல்லூர் பிரதேச செயலகம் அமைப்பதற்கு அனுமதி கோரி தங்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கையின் பேரில் தங்கள் தலைமையில் ஓர் அதிகாரிகள் கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்றதாக ஊடகச் செய்தி மூலம் அறிய வந்தது.
இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது. இதற்கு மேலாக நல்லூர் பிரதேச செயலகத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினால் வழங்கப்பட்ட குத்தகை 25 அல்லது 30 வருடம் என்றும் ஏற்கனவே அதில் 15 அல்லது 20 வருடங்கள் சென்றுவிட்டதாகவும், நல்லூர் கோவில் நிர்வாகம் கால நீடிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்தது. இவை முழுவதுமே உண்மைக்கு புறம்பானவை.
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு அதன் கட்டடம் அமைந்துள்ள 10 பரப்பு காணியை மாநகர சயைின் குத்தகையில் இருந்து நீக்கி 01.05.2005 ஆம் திகதியில் இருந்து 50 வருடக் குத்தகையை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததே நான்தான். அதில் சாட்சியாக நானே ஒப்பமிட்டிருப்பதையும் காணலாம்.
யாழ். மாநகர சபையில் தீர்மானம்
குத்தகைக் காலம் இன்னும் 30 வருடங்கள் இருக்கையிலும், குத்தகை முடிவுக் காலத்தில் அதனை நீடிப்பதற்கான ஏற்பாடு உடன்படிக்கையிலேயே உள்ளடக்கப் பட்டு இருக்கையிலும், சங்கிலி மன்னனின் பெயரில் அமைந்த பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில் இந்தக் காணியை தமக்கு வழங்குமாறு கோரும் நோக்கம் புரிந்து கொள்ள முடியாதததும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.
இதன் பின்னணியில் ஏதாவது மறைகரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதே. இதில் எனக்கிருந்த மிகப் பெரிய ஆச்சரியம் மாநகர சபை நிர்வாகமும் தெளிவற்று குழம்பியிருந்தமையாகும்.
கடந்த 13.10.2025 அவர்களுடன் கலந்துரையாடி முழு வரலாற்று விபரங்களையும் நான் தெளிவுபடுத்தியதன் அடிப்படையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமது ஆட்சி உரித்தில் இருந்த இந்தக் காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைத்து பூங்காவை மேம்படுத்த யாழ். மாநகர சபை 14.10.2025 ஆம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை எனது 17.07.2025 ஆம் திகதி கடிதம் மூலம் நான் ஏற்கனவே கோரியிருந்தமையையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
எனவே, இந்த விடயம் தங்களது கவனத்திற்கு வந்துள்ள நிலையில், இவ்வாறான நிலை மேலும் தொங்கு நிலையில் தொடராமல் இருப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுத்து இந்த தமிழின அரசாட்சியின் சின்னமாக “ நல்லூர் சங்கிலியன் பூங்கா” எனும் பெயரில் எம்மின வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்வதற்கான திடமான நிலையை ஏற்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



