நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியிருந்தது.
இந்தநிலையில் குறித்த பிணையை இடைக்காலத் தடையுத்தரவு மூலம் இடைநிறுத்த வேண்டுமா என்பது குறித்த தீர்ப்பை வழங்குவதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் நவம்பர் 18ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் நாமல் ராஜபக்சவின் சட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட பின்னரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார இன்று (13) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
இதேவேளை கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில், நாமல் ராஜபக்சவுக்கு கடந்த 3 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை இரத்து செய்து, அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இன்று (13) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டட மேற்படி மனு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த சீராய்வு மனுவை நிராகரிக்குமாறு கோரி, பிரதிவாதி நாமல் ராஜபக்ச சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் மற்றுமொரு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |