அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாற்றம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக என்று சிறிலங்கன் எயார்லைன்ஸின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
வாரத்திற்கு 10 விமானங்கள்
அதற்கமைய, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு வாரத்திற்கு 10 விமானங்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிட்னிக்கு ஏற்கனவே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிகரிப்புடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே சிறிலங்கன் எயார்லைன்ஸ் இயக்கும் மொத்த வாராந்த விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மெல்போர்னுக்கான இந்த மூன்று மேலதிக விமானங்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பயணிகள், தங்கள் பயண முகவர்களைத் தொடர்புகொள்ளலாம், சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 1979 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.srilankan.com ஐப் பார்வையிடலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |