ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவரால் புதிய கட்சி அலுவலகம் திறப்பு
இன மத பேதங்களை மறந்து ஒன்றிணையும் பட்சத்திலேயே இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என தாய்நாடு மக்கள் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விவசாய நாடு என்ற வகையில் காலனித்துவ ஆட்சியின் நீடித்த சமூக-பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் காரணமாக இலங்கை மக்கள் இழந்துள்ள தேசிய கொள்கை கட்டமைப்பிற்கான முக்கியமான தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசியல் கல்வியறிவு பெற்ற இலங்கை சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய்நாடு மக்கள் கட்சி
தொழிலதிபரும் ராஜபக்சர்களுக்கு மிக நெருக்கமானவருமான திலித் ஜயவீர தலைமையிலான தாய்நாடு மக்கள் கட்சியின் தேசிய தலைமையகம் இன்று (11) முற்பகல் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.
'புதிய சிந்தனையுடன் முன்னோக்கி செல்வோம்' எனும் தொனிப்பொருளில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாய்நாடு மக்கள் கட்சியின் தலைமையகம் கொழும்பு 08 இல் நிறுவப்பட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹேமகுமார நாணயக்கார, முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத், அரசியல் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஓய்வுபெற்ற அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தாய்நாடு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் அதன் ஸ்தாபகரும் தற்போதைய சிரேஷ்ட தலைவருமான ஹேமகுமார நாணயக்கார ஆகியோரின் தலைமையில் புதிய கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.