கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: கடற்படையினரின் அதிரடி சோதனையில் எண்மர் கைது
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 08 கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் (14) மாலை மூதூர், உப்பாறு கடற்பகுதியில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினர் கடற்பரப்பில் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது வழமை.
கடற்றொழில் வலைகள்
அதன்படி, நேற்றைய தினம் (14) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உப்பாறு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அந்தப் படகில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் சாதனங்களைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடும் எட்டு பேருடன் (08) ஒரு படகு மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் வலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கைகள்
இதன் போது கைது செய்யப்பட்டவர்கள், 23 தொடக்கம் 63 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா வாசிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எட்டு சந்தேகநபர்கள் (08) கைப்பற்றப்பட்ட படகு (01) மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் போன்றவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர், கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |