வடக்கு கடற்பரப்பில் அதிகரிக்கும் சட்டவிரோத கடற்தொழில்...11பேர் கடற்படையினரால் கைது!
சட்டவிரோதமான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட 11 பேர் சிறிலங்கா கடற்படையினரால் (Sri Lankan Navy) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் (07) குற்றாப்பு மற்றும் சாலை, கிளிநொச்சி (Kilinochchi) ஆகிய கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம்.
கடற்தொழில் உபகாரணங்கள்
அந்தவகையில், வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகர்ணி கடற்படைத் தளபதியின் நெறியாள்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குற்றாப்பு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான 02 படகுகள் சோதனையிடப்பட்டது.
இதில் அங்கீகரிக்கப்படாத கடற்தொழில் உபகாரணங்களைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய அங்கீகரிக்கப்படாத கருவிகள் உள்ளடங்களாக இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோல் சாலை கடற்பகுதியில் மேலும் 02 சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிட்டபோது, இலகுரக கடற்தொழிலில் ஈடுபட்ட 05 பேரை கைது செய்துள்ளனர், இந்த நடவடிக்கையின் போது 02 படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்தொழில்உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 21 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 11 சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |