தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது!
மன்னார் பேசாலை பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்த முயன்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 13 பேரும் அவர்கள் பிடித்த 627 கடலட்டைகளும், இதற்கு பயன்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் உபகரணங்களும், கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படையினர் இலங்கை கடலோரப்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம்.
கடற்தொழில் சாதனங்கள்
அந்தவகையில், கடந்த 09 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி கஜபாவின் தலைமையில் கடற்படையினர் மன்னார் பேசாலை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது சுமார் 180 கடலட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது மாத்திரமல்லாமல் 04 படகுகளும் அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, வங்காலைபாடு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த மேலும் 05 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த நடவடிக்கையின் போது, சுமார் 447 கடலட்டைகளும், 03 படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் சாதனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை, மன்னார், மற்றும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 21 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த 13 நபர்களுடன் கடலட்டைகள், 07 படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |