55 வயதுக்கு பின்னரும் சம்பளம்...பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓய்வுக்கால கொடுப்பனவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Premitha Bandara Thennakoon) தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை மாத்திரமே அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு 55 வயதின் பின்னர் சம்பளமோ அல்லது ஓய்வூதிய கொடுப்பனவோ வழங்கப்படாததினால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பிரமித்த பண்டார தென்னகோன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
அதன்படி அவர் சிறிலங்கா அதிபரிடம் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்வாறான சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிறுத்தப்படுகின்ற கொடுப்பனவை மேலும் வழங்குவது தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ரொஷான் பியன்வில ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |