வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு : சஜித் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏறக்குறைய 45,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுங்கள்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆளும் தரப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் இது ஒரு முக்கிய முன்மொழிவாக இருந்ததால் இந்த பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள்.
22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இத்தரப்பினர்கள் பெரும் தியாகங்களைச் செய்தனர். இவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுங்கள்.
இத்தரப்பினர்கள் கடந்த காலங்களில் தமது போராட்டத்தின் போது கூட பிரச்சினைகளை எதிர்கொண்டதால், இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள்.
ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளல்
இதேவேளை கல்வித் துறையில் உள்ள 706 வெற்றிடங்களை நிரப்ப வர்த்தமானி வெளியிடப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றன. அவர்கள் இன்னும் ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், முடிவுகளை விரைவில் வெளியிட்டு, உரிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும்.
மேலும் கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள். அடுத்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுங்கள். கல்வியற் கல்லூரிகள் ஊடாக பட்டம் வழங்கும் திட்டத்தை முன்னெடுங்கள்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |