வெடியரசன் கோட்டைப் பகுதியில் பதற்றம் - களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள்!
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவ்வூர் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கி.மு.200 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், தொல்புரம், பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்திலேயே இந்தக் கோட்டை அமைக்கப்பட்டது என்றும், ஆனால் தற்போது சிங்கள் ஆட்சியாளர்கள் இதனை தமது பொளத்த சின்னமாக பிரகடனப்டுத்தும் முனைப்பில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்தும் முயற்சி
அதுமட்டுமன்றி நெடுந்தீவிற்கான பிரதான வீதியைக் கூட தொல்பொருள் திணைக்களம் செப்பனிடாமல் வைத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் தற்போது அப்பகுதியில் புத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதனாலேயே மக்கள் பாவனையில் இருக்கம் பிரதான வீதியைக் கூட செப்பனிடாது வைத்துள்ளார்கள் எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் வெடியரசன் கோட்டைப் பகுதியில் விகாரை அமைக்கம் நோக்கில் அதற்கேற்றவகையான கட்டட அமைப்பும் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டட அமைப்பு தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடனேயே அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னணியினர் போராட்டம்
இவ்வாறான நிலையில், நெடுந்தீவு வெடியரசன் கோட்டைப் பகுதிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சென்று பார்வையிட்டதோடு, அங்கு ஒரு பேராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
அதனையடுத்து நெடுந்தீவு பிரதேசசெயலகத்திற்கு முன்பாகவும் ஒரு பிரதான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனையடுத்து குறித்த பகுதிக்கு கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து புலனாய்வுப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















