வன்னியில் நிகழ்ந்த அவலம் பலஸ்தீனத்திலும் : புளொட் அறிக்கை
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு தொடர்ச்சியான எமது ஆதரவை வழங்க தயாராகவுள்ளோம் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலைக் காரணம் காட்டி, பலஸ்தீன மக்கள் அனைவரையும் காவு கொள்ளும் கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது.
பலஸ்தீன மக்களுக்கு வாழ்வாதாரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் இஸ்ரேலின் நோக்கம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளைக் காரணம் காட்டி
1960 களில் இணக்கம் காணப்பட்டிருந்த ‘இரு நாடு’ எனும் தீர்வு உலக நாடுகளால் ஏற்றுக் கொண்டிருந்தாலும், காசாவின் ஆட்சியை வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இஸ்ரேல் நடைமுறையில் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு வன்னியின் கிழக்கு கரையின் சிறு நிலப்பரப்பில் அடைபட்டிருந்த மக்களை, புலிகளைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட அனுமதிக்கப்பட்டதைப் போலவே இன்று பலஸ்தீனத்திலும் ஹமாஸைக் காரணம் காட்டி அங்குள்ள மக்கள் கொல்லப்படுகின்றனர்.
மறைந்த பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் அவர்களின் தலைமையில் பலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் அங்கத்துவப் போராளிகள் அமைப்புகளும் சுதந்திர பலஸ்தீனத்திற்காக போரிட்ட போது அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள்.

அன்று பலஸ்தீன மக்களின் போராட்டம் மதங்களைக் கடந்து தேசத்தின் விடுதலையையே இலக்காகக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் பெரும்பாலான பலஸ்தீனர்களும் கணிசமானளவு இஸ்ரேலியர்களும் இரு நாடுகள் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
ஆனால் இன்று, மேற்குலக நாடுகளின் ஆதிக்க உணர்வும் பொருளாதார நலன்களும் அதற்கெதிரான பிராந்திய சக்திகளின் அதிகார முனைப்புகளும் பலஸ்தீன தேசத்தை சிதைத்து குறுக்கிவிட்டதோடு, அம் மக்களின் சுதந்திரப் போராட்டமும் அடிப்படைவாதப் போராட்டம் போல அணுகப்படுகிறது.
பலஸ்தீனத்தின் சுதந்திரம்
முற்போக்கு சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருந்த பலஸ்தீன சக்திகள் பிராந்திய போட்டிச் சுழியில் சிக்கி கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணங்கி, இணைந்து செயற்படும் நிலைக்கு தற்போது சென்றுவிட்டன.
பலஸ்தீன மக்களை விரட்டியும் பலஸ்தீனப் பிரதேசங்களை ஊடறுத்தும் உருவாக்கப்பட்ட இஸ்ரேலியக் குடியேற்றங்கள் விலக்கப்பட்டு,
குறைந்த பட்சம் 1967 இல் உலக நாடுகளால் இணக்கம் காணப்பட்ட எல்லைக்கோட்டுக்கு இஸ்ரேலியப் படைகள் மீள அழைக்கப்பட்டு உருவாக்கப்படக் கூடிய ‘இரு நாடுகள்’ தீர்வே பலஸ்தீனத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்.

கூடவே இஸ்ரேலிய மக்களுக்கு பாதுகாப்பையும் நிம்மதியையும் கொடுக்கும்.
பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு வடிவங்களையே இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்த அன்றைய ஜே.ஆர் அரசு தமிழர் தாயகத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது.
தேசத்தை துண்டாக்குதல்
குடியேற்றங்களை நிறுவுதல், தேசத்தை துண்டாக்குதல், பண்பாட்டினை மாற்றியமைத்தல், குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் என அனைத்தையும் படைபலத்தின் துணையுடன் நிறைவேற்றிக் கொண்டது. இன்று வரை அது தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஏறக்குறைய நூறாண்டுகளாக ஆக்கிரமிப்பாளனின், ஆயுதக் குழுக்களுக்கும் கட்டமைக்கப்பட்ட படைகளுக்கும் எதிராக விடாது போராடும் பலஸ்தீன மக்கள் தமது போராட்டத்தின் நியாயங்களை தார்ப்பரியங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தவும் தவறவில்லை.

பலஸ்தீன மக்களின் போராட்டத்துடன் ஒத்த பரிணாமங்களைக் கொண்டிருக்கும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இவையெல்லாம் படிப்பினைகளே.
பலஸ்தீன மக்களினது, அவர்களது தேசத்தினது சுதந்திரத்திற்கான நியாயமான தீர்வுக்காக நாம் என்றும் அவர்களுடன் உறுதியாய் நிற்போம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.