காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! பின்னணியில் அக்டோபர் தேர்தல்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காசா அமைதித் திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரித்துள்ளமை, நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வரவிருக்கும் தேர்தல்களுடனேயே பெரிதும் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் முன்னாள் உதவியாளரும் அரசியல் ஆய்வாளருமான மிட்செல் பராக் (Mitchell Barak) இதனை தெரிவித்துள்ளார்.
இது நெதன்யாகுவின் இறுதி நிலைப்பாடு அல்ல மாறாக அவருடைய ஆரம்ப நிலைப்பாடு (Opening Position) மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவுத் தளம்
அத்தோடு நெதன்யாகுவின் தற்போதைய தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நீடிக்கும் ஆயுள் இல்லை என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது வோஷிங்டனை நோக்கியது அல்ல, மாறாகத் தனது வலதுசாரி அரசியல் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விரைவிலோ அல்லது தாமதமாகவோ இஸ்ரேல் ட்ரம்ப் திட்டத்தை ஏற்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகப் பராக் தெரிவித்துள்ளார்.
ஆயுதக் களைவு
இந்த நிராகரிப்பானது ஹமாஸின் ஆயுதக் களைவு தொடர்பான வரிசைமுறை மற்றும் நேரத்தைக் பொறுத்ததே தவிர, அமெரிக்காவுடனான நிரந்தரப் பிரிவு அல்ல என்றும் அவர் விவரித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலை நோக்கிச் செல்லும் போது நெதன்யாகுவின் மிகப்பெரிய பலம் ட்ரம்ப்புடனான அவரது உறவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத் தலைவர்களில் எவரையும் விட மிகச் சிறந்த உறவு நெதன்யாகுவுக்கே உள்ளது எனக் குறிப்பிட்ட பராக், அதனை இழக்க நெதன்யாகு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |