போரை முடிக்கப்போவது நாங்களே : இஸ்ரேல் பிரதமர் இறுமாப்பு
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமையன்று ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலினை ஆரம்பித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு பதில் தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவமும் அதிரடியாக முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாக இருதரப்பிலும் சேர்த்து மொத்தமாக 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஹமாஸ் குழுவுக்கு எதிரான போரின் வெற்றி என்பது ஒட்டுமொத்த உலகின் வெற்றி என்றும், போரை ஆரம்பித்தது ஹமாஸ் குழுவினராக இருந்தாலும் இஸ்ரேலிய இராணுவம் தான் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்றும்" இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
அவர்களை அழித்துவிடுவோம்
இந்தப் போர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இந்தப் போரை தங்கள் தரப்பு விரும்பவில்லை என்று கூறியுள்ள நெதன்யாஹூ, போர் சூழலை ஹமாஸ் குழுவே உருவாக்கி விட்டிருப்பதாகவும் நெதன்யாஹூ கூறியுள்ளார்.
இந்நிலையில் தங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் ஆயுதக்குழு என்பது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு இணையானது என்று குற்றம் சாட்டிய இஸ்ரேலியப் பிரதமர், அவர்களை அழித்துவிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.