அர்ச்சுனாவிற்கு வலைவீசும் கருணா...! இலக்கு வைக்கப்படும் தமிழர்களின் வாக்கு வங்கி
கிழக்கு மாகாண அரசியல் களத்தில் பிள்ளையான் சிறைப்பட்டிருக்கும் நிலையில் அவரது தளத்தில் நின்றுகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கருணா அம்மான் வானளாவப் புகழ்ந்து தள்ளியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் ஒரு புதிய சதுரங்க வேட்டையை ஆரம்பித்து வைத்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கருணா அம்மான் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா போன்றவர்கள் துணிச்சலாகச் செயற்படுகிறார்கள், அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என கருணா விடுத்துள்ள பகிரங்கப் பாராட்டு, வெறும் தனிநபர் ஆதரவு தானா ? அல்லது பாரம்பரிய அரசியல் தலைமைகளுக்கு எதிராக ஒரு புதிய அணியை உருவாக்கும் நீண்டகாலத் திட்டமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, பிள்ளையான் தரப்பினர் நீண்டகால மௌனத்தைக் கலைத்துவிட்டு கருணாவுடன் கைகோர்த்துள்ள இந்த வேளையில் அர்ச்சுனாவையும் இந்த வளையத்திற்குள் கொண்டுவர கருணா முயற்சிப்பது - கிழக்கின் வாக்கு வங்கியை ஒரு புதிய சக்தியின் கீழ் கொண்டுவரும் தந்திரோபாயமாகவே பார்க்கப்படுகின்றது.
ஒருபுறம் ஆயுதப் போராட்டப் பின்னணி கொண்ட தலைவர்கள், மறுபுறம் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் செல்வாக்கைப் பெற்ற அர்ச்சுனா என இவர்கள் காட்டும் இந்த வினோதக் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சிகளின் செல்வாக்கைச் சிதைப்பதற்கான ஒரு கச்சிதமான வியூகமா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிறையிலிருக்கும் பிள்ளையான், களத்தில் நிற்கும் கருணா மற்றும் புதிதாக அர்ச்சுனா என இவர்களுக்கு இடையிலான இந்த முக்கோண அரசியல் தொடர்பு சொல்லும் செய்தி என்ன ? இது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வா அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு சந்தர்ப்பவாத நகர்வா ? கருணா அம்மானின் இந்த அர்ச்சுனா ஆதரவு அரசியலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் மற்றும் கிழக்கு அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் என்பவை குறித்து ஆழமாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |